பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் 2025 முதல் 2026-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி கட்டணத்தை 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதனால் பெற்றோர்கள் கோபம் அடைந்து வருடாந்திர கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான முதல் பருவ கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
சில பள்ளிகள் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வருடாந்திர கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தனது மகனின் பள்ளி கட்டணத்திற்கான கட்டணம் ரூ. 1.2 லட்சத்திலிருந்து ரூ. 2.1 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஒரு பெற்றோர் தெரிவித்தனர். இதில் போக்குவரத்து கட்டணம் அடங்காது என்பதுதான் இன்னும் வேதனை. கோவிட்-க்கு முந்தைய உயர்வு 10 சதவீதமாக இருந்த போதிலும் கோவிட்க்கு பிந்தைய பள்ளி கட்டண உயர்வு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
பள்ளிக் கட்டண உயர்வு:
அடுத்த கல்வியாண்டிற்கான முதல் பருவக் கட்டணத்தை பல பள்ளிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. சில பள்ளிகள் ஆண்டுதோறும் 10%-15% கட்டண உயர்வை மட்டுமே செய்திருந்தாலும், பல பள்ளிகள் 15% என்ற வரம்பை மீறி கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
ஒருவர் பள்ளி கட்டண உயர்வு குறித்து தனது விரக்தியை சமூக ஊடக தளங்களில் போஸ்ட்டாக பதிவிட்டிருந்தார். "ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகள் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்துகின்றன. இதற்கு எந்த விளக்கமும் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே வேலைக் குறைப்பு அதிகரித்து வருகிறது. வரிகள் மற்றும் வீட்டு கடன்களால் பெற்றோர்கள் பெற்றோர்கள் போராடி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தொடர்ந்து அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.