பியகமவை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த பியகம தேர்தல் தொகுதி அன்று தாம் சென்றிருந்த போது அந்தப் பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பியகம முதலீட்டு வலயத்தை நிறுவுதல் உள்ளிட்ட சரியான பொருளாதார தீர்மானங்களினால் பியகம குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் முழுமையாக பயனடையும் வகையில், நாடு முழுவதும் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது மீண்டு வந்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஜயத்தின் போது உலகத் தலைவர்களிடம் தாம் தெரிவித்ததாகவும் அவர்களில் பலர் இவ்வளவு குறுகிய காலத்தில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றம் ஆச்சரியமாக உள்ளதென தெரிவித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருந்தாலும் நாட்டின் வருமானம் போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளமையினாலேயே துரதிர்ஷ்டவசமாக VAT வசூலிக்க வேண்டியேற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த அபேசேகர ராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மதில் மற்றும் தங்க வேலி திறப்பு நிகழ்வில் நேற்று (25) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவற்றை தெரிவித்துள்ளார்.