நாட்டை உலுக்கிய தற்கொலைகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!
மத விரிவுரைகள் மற்றும் போதனைகளை வழங்கியதாக கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இது தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது. மேலும் அந்த நபர் வேறு அமைப்புகளிடம் பணம் பெற்றாரா என்பதை கண்டறிய, அந்த பணம் எப்படி கிடைத்தது, பணம் எப்படி செலவிடப்பட்டது என்பதை விசாரிக்க கோட்டை நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஹோமாகம பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட மத போதகராக பணியாற்றிய ருவன் பிரசன்ன குணரத்னவின் சீடர்கள் என கூறப்படும் இளம் பெண்ணும் இளைஞனும் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.21 வயதுடைய யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், விஷம் அருந்தி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.யக்கல பிரதேசத்தில் உள்ள வீட்டில் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் அவர் தங்கியிருந்த மஹரகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மதம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவுரைகளில் ஈடுபட்டு வந்த "ருவன் பிரசன்ன குணரத்ன" அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருந்தார்.அதன்பின், அவரது மூன்று குழந்தைகளுடன் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.