ஐவர் சுட்டுக்கொலை: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஐவர் சுட்டுக்கொலை: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது


பெலியத்தவில் இடம்பெற்ற ஐவர் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 காலியின் மாகால்ல மற்றும் மிரிஸ்வல - கதுருதுவ பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 35 வயதான இரு சந்தேகநபர்களிடமும் இருந்து ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 3 கையடக்கத் தொலைபேசிகள், கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 


சமன் பெரேரா உள்ளிட்டோரை கொலை செய்வதற்காக போதைப்பொருள் கடத்தற்காரரான ஊரகஹ மைக்கல் என்பவருடன், தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் தாக்குதலை மேற்கொள்வதற்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளமை சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொஸ்கொட சுஜி என்பவரால் ஊரகஹ மைக்கல் என்பவருக்கு இந்த கொலைச் சம்பவத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இதனிடையே, தங்காலை ஐவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை தடுப்புக் காவல் உத்தரவில் விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 54 வயதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, குறித்த குற்றச் செயலுக்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் குற்றச்செயலின் பின்னர் தப்பிச் செல்வதற்காக மறைத்துவைக்கப்பட்டிருந்த வேனும் ஹக்மன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. கொலையாளிகள் வருகை தந்த ஜீப், கனேமுல்ல பகுதியில் பொலிஸாரால் அண்மையில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது .

கடந்த 22 ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த வௌியேறும் பகுதிக்கு அருகில் T-56 ரக இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவரே இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

 

About UPDATE