மின் கட்டணத்திற்கு எதிராக சஜித் மனுத்தாக்கல்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மின் கட்டணத்திற்கு எதிராக சஜித் மனுத்தாக்கல்!

 

மின்கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


 

கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை 52 பில்லியன் ரூபா பாரிய இலாபத்தை ஈட்டியிருக்கும் வேளையில், இந்த இலாபம் நாட்டின் மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாமை, மின் கட்டணம் அதிகப்படியாக அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தைச் செலுத்த முடியாத 8 இலட்சம் மின் நுகர்வோரின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் இதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (08)  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கால் செய்தார்.

 

இலட்சக்கணக்கான மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் எம்.பி.டி. யு.கே.மாபா பத்திரன மற்றும் சட்டமா அதிபரை பிரதிவாதியாகத் குறிப்பிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

 


மதிப்பிடப்பட்ட நீர்மின் உற்பத்தி 3750 முதல் 4510 ஜிகாவோட் வரை தாண்டியுள்ளமை, மின்சாரத் தேவை மணிக்கு 400 ஜிகாவோட் குறைந்துள்ளமையினால் 26 பில்லியன் ரூபாவும், மின்சார அலகு ஒன்றின் விலையை 18 வீதத்தால் அதிகரித்ததன் காரணமாகவும், மின்சார சபை தலா 26 பில்லியனாக ரூபா வீதம் 52 பில்லியன் ரூபா இலாபத்தை இத்தருணத்தில் ஈட்டியுள்ளமையினாலும், இந்த இலாபம் நாட்டின் மின் நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாது, மின் நுகர்வோர், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் மேலும் ஒடுக்குவதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டில் வினைதிறனான மின் உற்பத்தி கொள்கை இல்லாததால், மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும், வினைதிறனான சேவை வழங்குவதிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைந்த மட்டத்தில் கொடுக்கக்கூடிய தருணத்தில், இதை மையமாக கொண்ட எந்த வேலைத்திட்டமும் நாட்டில் இல்லாததால், இது பெரும் பிரச்சினையாக உள்ளது. அனைத்து மின்சார நுகர்வோரின் உரிமைகளுக்காகவும் வேண்டியே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

 

இதன் மூலம் மின்சார விலையை குறைக்க வேண்டும். இதற்கான பணிகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்கு மேற்கொள்ள வேண்டும். இதனால் கிடைக்கும் இலாபத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, வறிய மக்களுக்கான மின் நுகர்வோருக்காக வேண்டி புதிய மின்சார விலைச்சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

நாட்டிலுள்ள மொத்த மின் நுகர்வோர் குறித்து சரியான தரவுகள் மின்சார சபையிடமோ அல்லது மின்சக்தி அமைச்சரிடமோ இல்லை. இந்த 2 நிறுவனங்களும் வைத்திருக்கும் தரவுகளில் முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறான முரண்பாடுகள் இருந்தும், துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பல்வேறு சட்டங்களை முன்வைத்துள்ளமை வியப்பளிக்கிறது. ஹிட்லரைப் போன்று மாறாமல் மகாத்மா காந்தி போன்று செயற்படுமாறே துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கூற வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

About UPDATE