மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் பிரவீனா. ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, உஸ்தாத் ஹோட்டல், ஹனி பீ மெமரீஸ் உட்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
டப்பிங் கலைஞரான இவர், தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, லாபம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
3 வருடங்களுக்கு முன்பு பிரவீனாவின் ஆபாசப் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து அறிந்த நடிகை பிரவீனா திருவனந்தபுரம் சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆபாச போட்டோக்களை பகிர்ந்தது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாக்யராஜ் (26) என தெரியவந்தது.
இவர் டெல்லியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் பொலிசார் பாக்யராஜை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் நடிகை பிரவீனாவின் போட்டோக்களை சமூக வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதை மார்பிங் முறையில் ஆபாசப் படங்களாக மாற்றியது தெரியவந்தது.
பொலிசார் அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.