சமையலறைக்குள் ஒடுங்கியிருந்த பெண்களால், ஆண்கள் கோலோச்சும் துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பாட்ரிசியா நாராயன். தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா, பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக தன்னுடைய 17-வது வயதில் நாராயன் என்ற பிராமண இளைஞரை மணமுடித்தார்.
திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்தே, தன்னுடைய கணவர் போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது.
இனியும் இவரோடு குடும்பம் நடத்த முடியாது என முடிவு செய்த பாட்ரிசியா அவரிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தனது இரண்டு குழந்தைகளோடு நடுத்தெருவில் நின்றார். அதிர்ஷ்டவசமாக பாட்ரிசியாவின் தந்தை அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.
தனது பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என முடிவு செய்த பாட்ரிசியா, சுதந்திரமாக தன் காலில் நிற்க வேண்டும் என முடிவு செய்து வீட்டைவிட்டு
வெளியேறினார்.சமையலில் ஆர்வம் கொண்ட பாட்ரிசியா புதுப்புது உணவுகளை செய்வதில் விருப்பம் உள்ளவர்.
தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக நிறுவனமொன்றில் வேலை செய்த பாட்ரிசியா, வீட்டில் வைத்து ஊறுகாய் மற்றும் ஜாம்களை தயாரித்து விற்பனை செய்தார்
. இதன் விற்பனை சூடுபிடிக்கவே, தான் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஊறுகாய் தொழிலை விரிவாக்கம் செய்தார்.
தனது வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் தள்ளுவண்டியில் கடை போட்டார்.
தனக்கு உதவி செய்வதற்காக இரண்டு மாற்று திறனாளிகளை பணியமர்த்திய பாட்ரிசியா, டீ, காஃபி, ஸ்னாக்ஸ், பழ ஜூஸ்களை விற்பனை செய்தார்.
கடை தொடங்கிய முதல் நாளில் ஒரே ஒரு காஃபி மட்டுமே விற்பனையானது. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை. அடுத்த நாள் ரூ.700-க்கு வியாபாரம் நடைபெற்றது. வாடிகையாளர்களை கவர்வதற்காக சாண்ட்விச், பிரெஞ்ச் ஃப்ரை, ஐஸ்க்ரீம் போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கினார். 1982 முதல் 2003-ம் ஆண்டு வரை இந்த தொழில் மூலம் தான் தனது குடும்பத்தை நடத்தி வந்தார்>இவரது உணவின் சுவையை அறிந்த குடிசை மாற்று வாரிய தலைவர், தங்களது அலுவலகத்தில் உள்ள கேண்டீனை நடத்தும் பொறுப்பை பாட்ரிசியவிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள பிற அலுவலகங்களிலும் தனது கிளைகளை தொடங்கினார்.
1998-ம் ஆண்டு சங்கீதா ரெஸ்டாரெண்ட் குழுமத்தில் பாட்னராக சேர்ந்தார் பாட்ரிசியா. இந்நிலையில் 2004-ம் ஆண்டு அவரது மகளும், மருமகனும் கார் விபத்தில் மரணமடைந்தனர். இந்த சோகத்திலிருந்து மீளவே அவருக்கு இரண்டு வருடங்கள் ஆனது. தனது மகளின் நினைவாக, பாட்ரிசியாவும் அவரது மகனும் 2006-ம் ஆண்டு சந்தீபா என்ற ரெஸ்டாரெண்டை தொடங்கினர்.இன்று 14 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களோடு செயல்பட்டு வருகிறது சந்தீபா ரெஸ்டாரெண்ட்.
வாழ்கையில் உத்வேகம் இழந்த நபர்களுக்கு இவரது வாழ்க்கை உந்துசக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் நாம் கொண்ட லட்சியத்தை அடையாமல் ஒருபோதும் வீழக்கூடாது என நமக்கு நியாபகப்படுத்துகிறது இவரது வாழ்க்கை. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
வாழ்கையில் வெற்றி பெற பெரிய படிப்புகள் தேவையில்லை, கடுமையான உழைப்பும், திறமையும் ஆர்வமும் இருந்தால் போதும் என்பதையே பாட்ரிசியாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி.