நிதி நெருக்கடியிலும் ரூ.6000 நிவாரணம்.. மத்திய அரசு உதவவில்லை.. தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
சென்னை: கடுமையான நிதி நெடுக்கடியிலும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பேரிடரை தமிழகம் சிறப்பாக கையாண்டதாகவும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2014-2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. பெற்றதைவிட அதிகமாகவே ரூ.6.96 லட்சம் கோடி பணம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.இதுதவிர, ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் மக்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டுவந்து இருக்கிறார். வீடு, சுகாதாரம், சாலை வசதிகள் என 17 திட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.2014 முதல் 2023 மார்ச் வரைக்கும் தமிழகத்திடம் பெற்ற வரி 6,23,713.3 கோடி வந்து இருக்கிறது. இதில் 6,96,666 கோடி ரூபாய் மொத்தமாக தமிழகத்து மத்திய அரசு கொடுத்திருக்கிறது. மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பில் 2014 முதல் 57,557 கோடி வந்திருக்கிறது. இதில் NHAI சாலைகள் போடுவதற்கு ரூபாய் 37,965 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. தவிர, பள்ளிகள் கட்ட 11,116 கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார் நிர்மலா சீதாராமன்.இதற்கு பதில் தரும் விதமாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு குறைவான அளவே நிதி ஒதுக்குவதாக கூறினார். மத்திய அரசு போதுமான நிதி வழங்காதது வருத்தம் அளிக்கிறது. நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. பேரிடர்களால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவி இல்லாமலேயே ரூ.6000 புயல் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் ரூ.1000 பொங்கல் பரிசாக கொடுக்கப்பட உள்ளது. மத்திய அரசு முழுமையாக நிதி கொடுப்பதில்லை. நாம் 1 ரூபாய் கொடுத்தால் மத்திய அரசிடம் இருந்து ரூ.29 பைசா மட்டுமே கொடுக்கிறது என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை என்றும தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.