ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கவில்லை . ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 42 உறுப்பினர்களின் பங்களிப்புடனேயே ஆட்சி அதிகாரம் காணப்படுகின்றது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தாம் வந்த பாதையை மறந்து செயற்பட கூடாது. தேசிய அரசாங்கத்தை தொடர்வதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கடந்த 60 வருடகாலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக பல தேசிய அபிவிருத்தி திட்டங்கள் தோல்வியினை கண்டன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரு பிரதான கட்சிகளும் ஒன்றினைந்து தேசிய அரசாங்கமாக நாட்டின் நிர்வாகத்தினை முன்னெடுத்து செல்வது சிறப்பான விடயமாகவே காணப்படுகின்றது.
தேசிய அரசாங்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை தனிமைப்படுத்தும் கருத்துக்களை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 42 உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை அடிப்படையாக கொண்டே தேசிய அரசாங்கம் தோற்றம் பெற்றது என்ற விடயத்தினை மறந்துவிடக் கூடாது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 6 உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கியதன் பின்னர் இரண்டு கட்சிகளும் தொடர்ந்து செயற்படுமா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. பிணைமுறி விவகாரத்தினை மையப்படுத்தியே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. குறித்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கியமை எமது தனிப்பட்ட விடயம். இதில் எவ்வித கட்சி அழுத்தங்களோ, அரசியல் உள்நோக்கங்களோ கிடையாது.
தேசிய அரசாங்கத்தில் எனது பொறுப்பில் காணப்பட்ட விளையாட்டுத்துறை தற்போது பாரிய முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் சில வரையறைகளுக்குட்பட்ட நிலையில் காணப்பட்ட விளையாட்டுத்துறை தற்போது நாடுதழுவிய ரீதியில் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை மறந்து செயற்பட கூடாது. தேசிய அரசாங்கம் தொடர்ந்த செயற்படுமா என்ற விடயத்தினை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.