தென்னி லங்கை அரசியல் தொடர்ந்து நெருக்கடியுடன் காணப்படும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெறவுள்ளார். மேலும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து மாநாயக்க தேரர்களுக்கு பிரதமர் தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியாக நாடு ஸ்திரமற்ற நிலைமையில் காணப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு சென்றுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவுக்கு புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து எடுத்துரைப்பதற்காக இன்று மாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன் பிரகாரம் கண்டிக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெறவுள்ளதுடன் அரசியல் நிலவரம் குறித்து மாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது பிரதமருக்கு மாநாயக்க தேரர்கள் விசேட அறிவுரை வழங்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.