(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய அரபு அமீரகத்தில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கையின் கோரிக்கைக்கு அமைய விடுக்கப்ப்ட்ட சிவப்பு அறிவித்தலின் பிரகாரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரை இலங்கைக்கு அழைத்து வர வெளிவிவகார அமைச்சு ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக இன்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார்.
மூன்றாம் நபர் கோரிக்கை ஒன்று இது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் உதயங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு உதய்ங்கவால் வெளியேற முடியாது என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக, அவரிடம் செல்லுபடியான கடவுச் சீட்டொன்று தற் சமயம் இல்லை என குறிப்பிட்டார்.
ஏனெனில் அவரது கடவுச் சீட்டுக்கள் கோட்டை நீதிமன்றினால் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் அவரால் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.
2006 ஆம் ஆண்டி மிக் 27 ரக விமானங்களின் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ஜங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே சட்ட மா அதிபர் சார்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உதவியாக மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக நீதிவான் லங்கா ஜயரத்ன, உதயங்க தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 26 ஆம் திகதி டுபாயில் வைத்து உதயங்க வீரதுங்க அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.