தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களின் போது இடம்பெற்ற விடயங்களைத் தூக்கிப்பிடிக்காமல், இனி அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, விட்டுக் கொடுப்புடன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், ஏறத்தாழ அனைத்து சபைகளுக்குமான தவிசாளர்களும் மேயர்களும் நகர பிதாக்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல்கள் சட்டம் பல்வேறு புதிய அனுபவங்களை நாட்டு மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியுள்ளது. வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரை, எட்டு மாவட்டங்களும் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, எமது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எமது தலையாய கடமை. நாளாந்த விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களைச் சிலர் தமது சுயநலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியதன் விளைவே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணம்.
எது எப்படி இருப்பினும், நடந்தவைகளை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கணக்கிலெடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும்.
எமது பிரதேசத்தின் அனைத்துக் கிராமங்களை சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்றதாகவும் ஆரோக்கியமிக்கதாகவும் மாற்றியமைக்க முன்வரவேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட்டு கூடியவரையில் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுப்பதே நாம் எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட்டு கூடியவரையில் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுப்பதே நாம் எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
அபிவிருத்திப் பணிகளில் வட்டார, கட்சி, இன, மத பேதங்களை மறந்து சபைகளில் உள்ள நிதிகளை முறையாகக் கையாண்டு நீடித்திருக்கும் அபிவிருத்திப் பணிகளை அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் உறுதிபூண வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினரும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு தாம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குக் கடமைப்பட்டவர்கள். அதே நேரம், மிகவும் பின்தங்கிய வட்டாரத்தின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் அதன் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியம். அதை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும்.
கட்சி ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நாம் தமிழ்த் தேசிய இன மக்கள் என்பதை நினைவிற்கொண்டு, போரால் அழிவடைந்துள்ள எமது கிராமங்களை பற்றுறுதியுடன் மீளக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் உறுதி பூணுவோம்.
இருக்கின்ற நிதிவளங்களைக் கொண்டு உங்கள் பணிகளை மேற்கொள்கின்ற அதேநேரம், மேலும் சில அத்தியாவசிய பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகையில், மாகாண சபை உறுப்பினர்கள் மூலமோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமோ மேலதிக நிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம். இந்த விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதற்குத் தயாராய் இருக்கின்றது.
உள்ளூராட்சித் தேர்தல்களில் பலர் பல்வேறு காரணங்களுக்காகப் பல கட்சிகளில் இணைந்து போட்டியிட்டிருக்கக்கூடும். அவைகளை மீட்டிப்பார்த்து பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
கோரமான வறுமையிலும், போதிய சுகாதாரமற்ற சூழலிலும் வாழும் எமது மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே எமது தலையாய பணியாக இருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அதற்காகவே நடத்தப்படுகின்றன. போட்டியிட்ட ஒவ்வொருவரும் அந்த நோக்கத்துக்காகவே போட்டியிட்டீர்கள். எமது மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற உறுதிபூணுவோம்- என்றுள்ளது.