முல்லைத்தீவில் மகாவலி குடியேற்றப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதை எதிர்த்து வட மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்று திரண்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நாளை மறுதினம் 10ஆம் திகதி மாலை 3மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரீ.ரவிகரன் நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார். போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பிவைக்கும் வகையில் மகஜர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்படும் என்றும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெறும் இடங்களை வடமாகாண சபை உறுப்பினர்களாகிய நாம் நாளை மறுதினம் நேரில் சென்று பார்வையிடவுள்ளோம்.
மேலும், இங்கு குடியிருந்த தமிழ் மக்கள் 1984 ஆம் ஆண்டு காடுகளுக்குள் புலிகள் ஊடுருவியுள்ளதாகத் தெரிவித்தே வெளியேற்றப்பட்டனர். பின்னர் இக்காணிகள் மகாவலி காணிகள் என அரசால் சுவீகரிக்கப்பட்டன. அதன் பின்னர் இப்போது இக்காணிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
இதேவேளை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத குடியேற்றத்திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் விரைவில் கலந்துரையாடவுள்ளோம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இதனை சாட்டாகக் கொண்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை குடியேற்றம் செய்வது, நிலத்தை அபகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது குடியேற்றம் செய்யப்படுவதாயின் அந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே குடியேற்றம் செய்யப்படவேண்டும் அவ்வாறு செய்வதாயினும் அந்தந்த மாவட்டத்தை, மாகாணத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியே நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.
மேலும், மகாவலி அதிகாரசபை சட்டத்தை இரத்துச்செய்யுங்கள் என நாம் கேட்பதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் மகாவலி அதிகாரச்சபையினால் செய்யப்பட்ட காணிக் கைமாற்றங்கள் மற்றும் குடியேற்றங்கள் சட்ட ரீதியாக எவ்வளவு வலுவானது என்பது குறித்து நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்படவில்லை. ஏனெனில் 13 ஆம் திருத்தச்சட்டம் அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். அரசியலமைப்பே சட்டரீதியாக மற்றைய எல்லா சட்டங்களையும் விட முக்கியத்துவம் வாய்ந்தது ,இந்நிலையில் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகாவலி அதிகார சபை சட்டம் மற்றைய சட்டங்களை கணக்கில் எடுக்காதது தான்தோன்றித்தனமான செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.