காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 8- ஆம் திகதி போராட்டம் நடைபெறும் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் சார்பில் அற வழியில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, திரைத்துறையினர் டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை நோக்கி திரையுலகினரின் பேரணி நடைபெறும் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் அடையாளப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது நடிகர் சங்கம். திரைத்துறையினர் பெரும்பாலானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.