தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை அந்நாட்டின் சர்வாதிகாரிபோல் ஆட்சி செலுத்தி வந்தார். கடந்த 1978ஆம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மறைவுக்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் அரசியலில் குதித்த பார்க் சுங்-ஹீ-யின் மகள் பார்க் கியூன் ஹே கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தென்கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார்.
ஊழலற்ற ஆட்சியை வழங்குவேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியை கைப்பற்றிய பார்க் கியூன் ஹே வெகு குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.
அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும் அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
மேலும் அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று சோய் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தின.
இதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 இலட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது.
இதையடுத்து பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இம் முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பார்க் கியூன் ஹேவை பதவி நீக்கம் செய்தது.
இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 2 கோடியே 30 இலட்சம் வோன் (அமெரிக்க டொலர்களில் சுமார் 2 கோடியே பத்து இலட்சம்) அதிகமான பணப்பலன்களை பார்க் கியூன் ஹே அடைந்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.
இதையடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிம் சேயூன், குற்றவாளி பார்க் கியூன் ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 இலட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வழக்கமாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துவந்த பார்க் கியூன் ஹே இந்த தீர்ப்பின்போதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தென்கொரியா நாட்டு நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு முழுவதும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது.