தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் நவீன அழைப்பு நிலையத்தின் மூலமாக, +94714854734 என்ற இலக்கத்தை பயன்படுத்தி வட்ஸப், வைபர், இமோ சமூக ஊடகங்கள் மூலமாகவும், இவற்றுக்கு மேலதிகமாக முகநூல் மூலமாகவும் மொழி உரிமை மற்றும் மொழிச்சட்ட அமுலாக்கல் தொடர்பான பிரச்சினைகளை எமது அமைச்சுக்கு அறிவிக்கலாம். இந்த புதிய தொடர்பாடல் முறைமைகளுக்கு மேலதிகமாக 1956 இலகு அழைப்பு (Hot Line) இலக்கமும், https://www.facebook.com/LanguageRIGHTS/ என்ற முகநூல் பக்கமும் பாவனையில் இருக்கின்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள நவீன அழைப்பு நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பெயர் பலகைகள், பொது பாவனை படிவங்கள் ஆகியவை மும்மொழிகளில் இல்லாதவிடத்து, மொழி பாவனையில் எழுத்து இலக்கண பிழைகள் இருக்குமிடத்து அவற்றை படம் பிடித்து எமக்கு அனுப்பி வைக்கலாம். இவற்றை அனுப்பும் போது அந்த மொழிச்சட்ட மீறல் நிகழ்ந்துள்ள இடம், அலுவலகம், காலம் என்பவை பற்றியும் எமக்கு அறியத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
+94714854734 என்ற இலக்கத்தை பயன்படுத்தி வட்ஸப், வைபர், இமோ ஆகிய சமூக ஊடகங்கள் மூலமாகவும், https://www.facebook.com/LanguageRIGHTS/ என்ற முகநூல் பக்கம் மூலமாகவும் தொடர்புகளை ஏற்படுத்தலாம். சமூக ஊடகங்கள் என்பதால் இவற்றின் பாவனை நாளின் இருபத்து நான்கு மணித்தியாலமும் அமுலில் இருக்கும். இதற்கு மேலதிகமாக வழமையான 1956 என்ற இலகு அழைப்பு (Hot Line) இலக்கமும் பாவனையில் இருக்கின்றது. இதன்மூலம் அலுவலக நேரங்களில் நேரடியாக அழைப்புகளை ஏற்படுத்தி அழைப்பு நிலைய அலுவலகர்களுடன் உரையாடி தகவல்களை தெரிவிக்கலாம் அல்லது பெறலாம்.
இந்த நவீன அழைப்பு நிலையம் மூலம் குறிப்பிட்ட சொற்களின் மொழிபெயர்ப்புகள் மற்றும் விபரங்கள் ஆகியவற்றையும் பெறலாம். இந்த வசதியை எதிர்காலத்தில் இன்னமும் அதிகரிக்க முடிவு செய்துள்ளேன். அத்துடன் அனைத்து அரச நிறுவனங்களும் தமது பெயர் பலகைகளை அமைக்கும் போதும், பொது பாவனை படிவங்களை அச்சடிக்கும் போதும் எம்முடன் தொடர்பாடலை ஏற்படுத்த இன்னமும் மத்தியப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப செயன்முறைகளை விரைவில் இந்த அழைப்பு நிலையத்தின் ஊடாக செயற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
மேலும் இந்த அழைப்பு நிலையம் மூலமாக, எனது அமைச்சின் இன்னொரு கடப்பாடான தேசிய சகவாழ்வு பிரச்சினைகளை உள்வாங்கும் முறைமை பற்றியும் தற்போது நான் ஆலோசித்து வருகிறேன். இதன்மூலம் நாடு முழுக்க இன, மத பதட்ட நிலைமைகள் உருவாகும் அறிகுறிகள் காணப்படுமானால் அவற்றை எமக்கு அறிவிக்க செய்து, எனது அமைச்சின் மூலம் அவற்றை சட்டம், ஒழுங்கு துறையினருக்கு அறிவிக்கும் வழி முறைகளை நான் தற்போது ஆலோசித்து வருகிறேன். எல்லா புகார்களும், வரிசைப்படுத்தப் பட்டு உரிய மேல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும். அவற்றை அமைச் சின் மொழி உரிமை பிரிவும், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவும் கண்கா ணித்து வழிநடத்தி அமைச்சருக்கு அறிக்கை சமர்ப் பிக்கும் என்றார்.