யாழ்ப்பாண நகரில் நகைக் கடைகள் பலவற்றில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்ட பெண் நகைக்கடை ஒன்றில் வைத்து நேற்று மடக்கப்பட்டார்.
கண்டியைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அவரைக் கடைக்குள் பூட்டி வைத்துப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்றுமாலை 4.30 அளவில் இடம்பெற்றது.
சில மாதங்களாக நகைக்கடைகளுக்கு வரும் குறித்த பெண் நகைகளைக் கொள்வனவு செய்வது போல பல நகைகளையும் பார்வையிடுவார். பின்னர் அவற்றில் ஒன்றாவது காணாமல் போய்விடும். இவ்வாறு பல கடைகளில் திருட்டுப் போனமை தெரியவந்தது.
இது தொடர்பில் ஏனைய நகைக்கடைக்காரர்களுக்கும் புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் நேற்றுத்திருட முற்பட்டபோது அவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
குறித்த கடையில் கடந்த பெப்ரவரியிலும் திருட்டு இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. அவர் தப்பியோடாதவாறு கடைக் கதவுகள் மூடப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதனால் அந்தக் கடையின் முன்பாக ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்த்தனர். பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணை நடத்துவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.