காணியின் உரிமையாளருக்கு தெரியாமலேயே, அக்காணியை பிறிதொருவருக்கு காணி பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உறுதியின் தகவல்களை மாற்றி, போலியாக செய்யப்பட்ட உறுதியொன்றினை தயார் செய்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்றினை பேலியகொட விஷேட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பேலியகொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், கிடைக்கப் பெற்ற 11 முறைப்பாடுகளுக்கு அமைய 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 300 இற்கும் அதிகமான போலி, உண்மை உறுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இம்மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் உள்ளதாக நம்புவதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பேலியகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் இது தொடர்பில் நேற்று மாலை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்திய அவர் இதனை தெரிவித்தார்.
பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து, விற்பனைக்கு உள்ள காணிகளை தேர்ந்தெடுக்கும் சந்தேக நபர், பின்னர் காணி பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று குரித்த காணியின் உண்மை உறுதியைப் பரீட்சித்து அந்த உண்மை உறுதியில் சூட்சுமமாக மாற்றங்களைச் செய்வதாகவும் அதனை மையப்படுத்தி போலி உறுதியைத் தயாரித்து, தரகர் ஊடாக குறித்த காணியை விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக கூறும் பொலிஸார், பேலியகொடை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக பேலியகொட விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஹ்,ஏ,ஆர். சமிந்த தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளிலெயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மினுவாங்கொடை இல்லத்தின் பின்னால் நிலத்துக்கு கீழ் சூட்சுமகாக கொங்றீட் , தகடுகள் இட்டு மறைக்கப்பட்டிருந்த கிடங்குக்குள் இருந்து போலி, உண்மை காணி உறுதிகள், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு அடையாள அட்டைகள், வங்கி காசோலைகள் உள்ளிட்டவற்றை மீட்டதாகவும் போலி உறுதிகளை தயாரிக்க பயன்படுத்திய கணினிகள், காணி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள 28 தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற பல முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த விசாரணைகள் விஷேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது இந்த மோசடிகளின் பிரதான சந்தேக நபரான 42 வயதான, ராகம - பட்டுவத்தயைச் சேர்ந்த மினுவாங்கொடையில் தற் சமயம் வசித்து வந்த முத்து தந்திரி பெஸ்டியன்கே லசித் ப்ரயன் நிஷாந்த பெர்ணான்டோ என்பவரை நாம் கைது செய்தோம். இந் நபரால் மோசடிக்கு உள்ளான எவரேனும் இருப்பின் அது தொடர்பில் பேலியகொட விஷேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்கலாம்.
இந்த மோசடிகளை சந்தேக நபர் பின்வருமாறு சூட்சுமமாக முன்னெடுத்துள்ளார். முதலில், இந்த சந்தேக நபர் பத்திரிகையில் வரும் விளம்பரங்களில் காணி விற்பனை தொடர்பிலான விளம்பரங்களை தேர்ந்தெடுத்துள்ளார். அவ்விளம்பரத்தில் உள்ள தகவல்களைப் பெற்று அவ்விடத்துக்கு சென்று குறிப்பிட்ட காணியையும் பரீட்சிக்கும் சந்தேக நபர், அது எவரேனும் குடியிருக்கும் இடமா அல்லது கேட்பாரற்று கிடக்கும் காணியா என்பதை தீர்மானித்த பின்னரேயே தனது நடவடிக்கைகளுக்குள் இறங்கியுள்ளார்.
பின்னர் அவர் அந்த காணிக்குரிய பதிவினை தேடி குறிப்பிட்ட காணிப் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று காணி உறுதியையும் பரீட்சித்துள்ளார். இவ்வாறு பரீட்சிக்கும் போது அவர் சூட்சுமமாக சில மாற்றங்களை அந்த காணி உறுதிகளில் செய்துள்ளார். அதாவது உதாரணமாக காணி உறுதியில் உரிமையாளர் பெயர் பிரசன்ன என்று இருந்தால் அதனை பிரசங்க என்றும் உறுதி இலக்கம் 157 என்று இருந்தால் அதனை 457 எனவும் மாற்றி அதன் பிரதியொன்றினையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர் காணி உறுதி மற்றும் ஆவணங்களில் உள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைய அந்த வயதை ஒத்த ஒருவரை சந்தேக நபர் தனது திட்டத்துக்காக கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ளார். அவ்வாறு கண்டுபிடிக்கப்ட்ட நபரின் புகைப்படத்தை எடுத்து அதற்கு போலியான தேசிய அடையாள அட்டை ஒன்றினை முதலில் சந்தேக நபர் தயார்ச் செய்துள்ளார். அவ்வாறு தயார்ச் செய்யும் போது பெயர் காணி உறுதியில் மாற்றப்பட்ட பெயருக்கே தயார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த போலி அடையாள அட்டைக்கு ஏற்றால் போல் போலியான காணி உறுதியும் தயார்ச் செய்யப்பட்டு அவ்வுறுதிக்கு அமையவே, தரகர் ஒருவர் ஊடாக காணியானது விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இந் நிலையில் காணியை விற்கும் போது, காணியின் உரிமையாளராக போலி அடையாள அட்டையில் உள்ள நபர் முன்னிறுத்தப்படும் நிலையில் போலி உறுதியின் பிரதி ஒன்று, காணி கொள்வனவு செய்யும் நபருக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உறுதியை அவர் காணி பதிவாளர் அலுவலகத்தில் பரீட்சிக்கும் போது ஏற்கனவே அங்கு பெயர் மற்றும் இலக்கம் ஆகியன மாற்றப்பட்டுள்ள நிலையில்; அதனுடன் இணங்கிப் போவதால் அங்கு வைத்து இந்த மோசடியை கண்டுபிடிப்பது சாத்தியமில்லாமல் போகின்றது.
காணியை விற்பனைச் செய்த பின்னர் குறித்த சந்தேக நபர் தனது தொலைபேசி இலக்கத்தையும் தொலைபேசியையும் மாற்றும் நிலையில், காணியை கொள்வனவு செய்தோர் காணியில் ஏதேனும் நிர்மாணிக்க முற்படும் வேளையில் உண்மை உரிமையாளர்களுடன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்கின்றனர்.
இவ்வாறே மிக சூட்சுமமாக ஒவ்வொரு மோசடியும் இடம்பெற்றுள்ளன. இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபரையும், காணிகளின் உரிமையாளர்களாக போலி அடையாள அட்டைகளுடன் சொந்தம் கொண்டாடிய 5பேரையும் நாம் கைது செய்துள்ளோம். இந்த மோசடிகளுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி கைது வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளோம். நாட்டின் எப்பகுதியிலேனும் இவ்வாறுயாரேனும் ஏமாற்றப்ப்ட்டிருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறியத்தாருங்கள். என்றார்.