எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானிக்க முடியும் என அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மூன்று ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தேசியப் பிரச்சினை தொடர்பில் பேசவில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினை குறித்தே கனவம் செலுத்துகிறார்.ஆகவே அவர் எதிர்க்கட்சித் தலைமைக்குப் பொருத்தமற்றவர்.
மேலும் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. அம்மாகாண சபைகளின் அதிகாரம் தற்போது மாகாண ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதமளவில் நடத்துவதாக அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு வாக்குறுதியளித்துள்ளது. ஆகவே பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டுவதனை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் புதிய தேர்தல் முறையைக் கொண்டு வந்தது. எனினும் அம்முறையின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை அதிர்ஷ்டலாபச் சீட்டு மூலம் தெரிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எந்தவொரு காரணங்களையும் அடிப்படையாகக்கொண்டும் மாகாண சபைத் தேர்தலைப்பிற் போடக்கூடாது. பழைய (விகிதாசார) முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அத்துடன் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டுவது உறுதி. தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதன் மூலம் அரசாங்கத்தின தோல்வியே வலுப்பெறுகிறது.
அத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கூட்டு எதிர்க்கட்சி அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக எவராவது குறிப்பிடுவார்களாயின் அது உண்மைக்குப் புறம்பானதாகும். அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ண, நிமல் சிறிபால டி. சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனேயே தாம் பேச்சுவா ர்த்தை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்.