இலங்கையுடன் பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானிய பிரதமர் உறுதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கையுடன் பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானிய பிரதமர் உறுதி

Image result for ஷஹீத் கான் அப்பாஸி உறுதியளித்தார்.இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக கூட்டுறவை பலமாக முன்னெடுப்பதற்கு பாகிஸ்தானிய பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸி உறுதியளித்தார்.
 பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் இஸ்லாமாபாத் நகரிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதியை பாகிஸ்தானிய பிரதமர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இரு தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
பாகிஸ்தானின் குடியரசுதின விழாவில் பிரதம அதிதியாக பங்குபற்றுவதற்காக விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நிகழ்வில் பங்குபற்றியமைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தானிய பிரதமர், ஜனாதிபதியின் இந்த பங்கேற்பு தமது நாட்டுக்கு கௌரவமாகும் என்றும் தெரிவித்தார்.
அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைவர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு என்ற வகையில் தமக்கு இந்த அழைப்பை விடுத்தமைக்காக ஜனாதிபதி பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார கூட்டுறவில் ஒரு பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை அடைந்துகொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத்துறையில் தமது அனுபவங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாராக உள்ளதாக பாகிஸ்தானிய பிரதமர் தெரிவித்தார். 
இலங்கை இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நட்புறவின் அடிப்படையில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களை ஜனாதிபதி பாராட்டினார்.
அண்மையில் ஏற்பட்ட உரம் தொடர்பான பிரச்சினையின்போது தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டமையை தொடர்ந்து பாகிஸ்தானிய பிரதமர் துரிதமாக பதிலளித்தமை குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகளின்போது பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கும் தொடர்ச்சியான உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி, யுத்த காலத்தில் பாதுகாப்புத் துறைக்கு வழங்கிய பயிற்சிகள் மூலமான உதவிகளையும் பாராட்டினார்.
அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பாகிஸ்தானிய பிரதமர், தனது முதிர்ச்சியான அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, செயற்பட்ட விதம் குறித்து தனது கௌரவத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிகழ்வுகளை சில பிரிவினர் தவறாக பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும், அது தொடர்பாக தான் கவலையடைவதுடன், மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கும் கலந்துரையாடியதுடன், இந்த நடவடிக்கைகளை செயற்திறமாக முன்கொண்டு செல்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் பாகிஸ்தானின் வெளிநாட்டு செயலாளரும் கைச்சாத்திட்டனர்.
பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய பாடசாலைக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரும் பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியின் பீடாதிபதியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தமொன்றில் பாகிஸ்தானின் மாநில கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாகிஸ்தானின் இலங்கை உயர் ஸ்தானிகரும் கைச்சாத்திட்டனர்.
இதேநேரம் பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக, முதலீட்டு நட்புறவு சங்கத்தினால் இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்பான அன்பளிப்பொன்றை ஜனாதிபதி பாகிஸ்தானிய பிரதமரிடம் கையளித்தார்.

About Unknown