பாகிஸ்தான் மேல் மன்றிற்கு முதல் முறையாக இந்து தலித் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் மன்றில் மொத்தம் 52 உறுப்பினர்கள் (செனட்டர்கள்) உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 130 பேர் மேல் மன்றிற்கு போட்டியிட்டனர்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் இருந்து தலா 12 உறுப்பினர்கள், கைபர் பக்துன்கவா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் இருந்து தலா 11 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 52 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மாகாண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோலி என்பவர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் இந்து தலித் பெண் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) உறுப்பினர் கிருஷ்ண குமாரிக்கு மேலவைத் தேர்தலில் போட்டியிட பிபிபி கட்சி வாய்ப்பளித்தது. ஏற்கெனவே பிபிபி கட்சி சார்பில் முதல் இந்து பெண் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்பவர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ண குமாரி கடந்த 1979ஆம் ஆண்டு பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவர் சுதந்திர போராட்ட வீரர் ரூப்லோ கோலி குடும்பத்தில் இருந்து வந்தவர். கடந்த 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷார் சிந்து மாகாணத்துக்குள் ஊடுருவ முயன்ற போது அவர்களுக்கு எதிரான போரில் ரூப்லோ பங்கேற்றார். அதன்பின் ரூப்லோ கைது செய்யப்பட்டு பிரிட்டிஷாரால் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
16 வயதாக இருக்கும் போது லால்சந்த் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. எனினும் சிந்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படித்து சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் பிபிபி கட்சியில் சேர்ந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். அவர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.
பாராளுமன்ற மேல் மன்ற தேர்தலில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.