ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை குறித்த பிரேரணை எவ்வாறு இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்தே இந்த விவாதம் நடத்தப்படுகின்றது.
இதில் முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்கையை வெ ளியிட்டு உரையாற்றுவார். அல் ஹுசேன் ஏற்கனவே இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டியே ஹுசேன் கருத்து வெளியிடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் சார்பில் தூதுக்குழுவின் தலைவர் உரையாற்றுவார். பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த விவாதத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர். இதன்போது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளினால் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு இலங்கையின் சார்பில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை கூட்டத் தொடரில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.
விசேடமாக ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள 14 க்கும் மேற்பட்ட விசேட உபக்குழுக்கூட்டங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து இராணுவத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜெனிவாவில் முகாமிட்டு பிரசாரங்களை செய்யவுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பாக ஜெனிவா வளாகத்தில் இம்முறையும் பல்வேறு உபக்குழுக்கூட்டங்களை நடத்தவுள்ளன. தென்னிந்தியாவின் பசுமை தாயகம் உள்ளிட்ட சில அமைப்புக்களும் இலங்கை தொடர்பில் உபகுழுக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
இந்த உபக்குழுக்கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க வெளிவிவகார அமைச்சர் தலைமையில் அமைச்சின் உயர் அதிகாரிகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் ஜெனிவா நோக்கி செல்லவுள்ளனர். பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமான 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.
அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை குறித்த அறிக்கையை வெ ளியிட்டிருந்த மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை முன்னெடுத்து வருகின்ற வகிபாகம் மீண்டும் தொடரவேண்டும். 2017 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தும் செயற்பாடு கடந்த ஒருவருடகாலமாக தேங்கிக்கிடக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கின்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு அரசியல் ஒத்துழைப்பு கிடைக்காத நிலைமை இலங்கையில் காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் என்பன முன்னெடுக்கப் படாமையே காணப்படுகின்றன என்றும் செயிட் அல் ஹுசைன் குறிப்பிட்டிருக்கின் றார்.