உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று ஆரம்பம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று ஆரம்பம்

10 அணிகள் பங்குகொள்ளும் உலகக்  கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டித் தொடர் ஸிம்பாப்வேயில் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டு  மே 30 ஆம் திகதி முதல் ஜூலை 14  ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி ஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் அணிகளின் தரவரிசைப்படி முதல் 8 இடங்களை வகித்த தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றன.
முன்னாள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தரவரிசையில் 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதால், நேரடியாக தகுதி பெற முடியவில்லை.
ஆகையால், 10 அணிகள் மாத்திரம் பங்குகொள்ளும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தெரிவு செய்யப்படவுள்ளன. ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு இராச்சியம், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், நேபாளம், ஸ்கொட்லாந்து,  ஸிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 
தகுதி சுற்றில் முதல் நாளான, இன்றைய தினம் 4 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆப்கானிஸ்தான்-ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினியா-ஐக்கிய அரபு இராச்சியம்,  அயர்லாந்து-நெதர்லாந்து, ஸிம்பாப்வே,-நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன.

About Unknown