இந்தியா - தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே முத்தூர் சாலை பிரிவில் இலங்கை அகதிகள் முகாமில் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவர்களுடன் லிங்கேஸ்வரன் தந்தை நடராஜ், தாய் பவானி ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று வழக்கம் போல் லிங்கேஸ்வரன், அவருடைய தாய் பவானி, தந்தை நடராஜ் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.
சுபாஷினி மட்டும் குழந்தையுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் அங்கு சென்று பார்த்த போது சுபாஷினி தூக்கில் தொங்கிய நிலையிலும் அவரது காலடியில் குழந்தை அழுது கொண்டு இருப்பதையும் பார்த்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தான். அவர்கள் காங்கயம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்து சென்று தூக்கில் தொங்கிய படி கிடந்த சுபாஷினியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுபாஷினி வீட்டில் பொலிஸார் சோதனை செய்த போது ஒரு கடிதம் சிக்கியது. அதனை சுபாஷினி எழுதி இருந்தார். அதில் "நான் தனியாக இருக்கும் போது எனது உடம்புக்குள் ஏதோ ஒரு ஆவி இருந்து கொண்டு எனது கணவரை கொல்ல சொல்கிறது.
ஏற்கனவே ஒரு முறை கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்க முயன்றேன். மனது சரியில்லாததால் அந்த சாப்பாட்டை எடுத்து விட்டேன். நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக எனது கணவரை கொன்று விடுவேன்" என எழுதப்பட்டு இருந்தது.
கடிதத்தை கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.