முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு முதல் கட்ட சந்திப்பு நடைபெற்றுள்ள நிலையில், இன்று பிற்பகல் 4 மணிக்கு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறவுள்ளது.
அம்பாறை பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மேற்கொள்ளவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமருக்கு வலியுறுத்தும் சந்திப்பு நேற்றிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர், 3 தடவைகள் தொலைபேசி மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டு பேசிய பின்னர், பொலிஸ் மா அதிபருடன் இந்த அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஹபீர் காசிமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக றிஷாத் பதியுதீனும் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டனர்.
அம்பாறை கலவரம் பொலிஸார் முன்னிலையில் நடைபெற்றமை, சாதாரண சட்டத்தின் கீழ் சிலரை கைதுசெய்தமை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தமை, பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களையும் கைதுசெய்யாமை, சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான முஸ்தீபுகள் குறித்து இதன்போது பிரதமருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.
சட்டம் ஒழுங்கு அமைச்சை கேலிக்குட்படுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தக் கலவரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸார் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முஸ்லிம் அமைச்சர்களால் வலியுறுத்தப்பட்டது.
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் இதன் இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு காரணமாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று ஜனாதிபதியுடன் செல்லவிருந்த மட்டக்களப்பு பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட சந்திப்பின் பின்னர், நாளை (04) ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அம்பாறை கலவரம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட சந்திப்பொன்று இன்று (03) காலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மு.கா. செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், கட்சியின் வெளிவிவகார பணிப்பாளரும் சட்டத்தரணியுமான ஏ.எம். பாயிஸ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.