இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லை களுக்கிடையே அமைந்துள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெரு விழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகின்றது.
நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் நற்கருணைப் பெருவிழாத் திருப்பலி வழிபாடுகள் நடைபெறும். நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை ஆகியோர் இணைந்து பெருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றவுள்ளனர்.
இப்பெருவிழாத் திருப்பலியில் இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் இந்தியாவிலிருந்து 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய யாத்திரிகர்கள் சார்பில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கான கொடிமரம் அங்கிருந்து எடுத்துவரப்படவுள்ளதாக நெடுந்தீவு பங்குத்தந்தை எமில்போல் அடிகளார் தெரிவித்தார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாவுக்கு இம்முறை இலங்கை மற்றும் இந்திய நாடுகளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றவகையில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய விசேட ஏற்பாடுகள் என்பன அங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து கச்சதீவுக்கு செல்வதற்கு வசதியாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியிலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு பேருந்து சேவைகள் இடம்பெறும். இதற்கு மேலதிகமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும். அன்றைய தினம் காலை 5 மணியிலிருந்து நண்பகல் 2 மணிவரை குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து கச்சதீவுக்கான கடல்வழி படகுச் சேவைகள் இடம்பெறும்.
படகுச் சேவைக்கான ஒருவழி கட்டண மாக குறிகாட்டுவானிலிருந்து 300 ரூபாவும் நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒருவழி பயணக் கட்டணமாக 225 ரூபாவும் அறவிடப்படும். சேவையில் ஈடுபடும் படகுகள் யாவும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள் ளது. பயணிகளின் பாதுகாப்புக் கருதி பாதுகாப்பு அங்கியை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருவிழா ஒழுங்குகளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதேபோன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி தத்தமது சேவைகளை மேற்கொள்வார்கள். பக்தர் களின் நலன்கருதி நிரந்தர மலசலகூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கச்சதீவு திருத்தல திருவிழாவுக்கு வரும் யாத்திரிகர்கள் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தாமே எடுத்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட் டுள்ளதுடன் கச்சதீவு பிரதேசத்தில் பொலித் தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகுச் சேவை இடம்பெறும் போது கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.