தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான கால எல்லை கடந்த புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் இரகசியமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
எனவே அவ்வாறு இரகசியமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பபவர்களுக்கு எதிராக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் சட்டமீறல் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரத்தின ஜீவன் எச். ஹூலிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தேர்தலை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை வாக்குப் பெட்டிகள் இன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளன. எனவே வாக்குப் பெட்டிகள், ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் பொறுப்பேற்றல் போன்ற பணிகளுக்காக பத்தொன்பது பாடசாலைகளும் இரண்டு கல்வியியல் கல்லூரிகளும் தயார்செய்யப்பட்டுள்ளன.
சமய அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதனூடாக சிலர் அபேட்சகர்களை ஊக்குவிப்பதற்கான பிரசாரங்களையும் முன்னெடுக்கலாம். அவ்வாறு மேற்கொள்வதும் தேர்
தல் சட்டத்தை மீறும் செயலாகும். ஆகவே அவ்வாறு எவராவது தேர்தல் சட்டத்தை மீறுவார்களாயின் அது குறித்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.