கற்பித்தலில் தேசிய டிப்ளோமாதாரிகள் 71 பேருக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்வி அமைச்சில் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஒரு நாட்டில் கல்வித்துறை அபிவிருத்தியானது அந்நாட்டின் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் இன்றியமையாததாகும். அதனை கருத்திற்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கல்வி அமைச்சு கல்வித்துறையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் ஆசிரியர் நியமனங்கள், அதிகாரிகளின் நியமனங்கள், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி செயற்றிட்டங்கள், மாணவர்களுக்கான காப்பீடு, பாடசாலைகளில் மின்சாரம், மலசலகூடம், குடிநீர் திட்ட அபிவிருத்திகள், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டம், அத்துடன் மலையகத்தில் 25 கணித, விஞ்ஞான பாடசாலைகளின் அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சிச்சாலை உட்பட தேசிய கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திகள் என கல்விசார் பல்வேறு விடயங்களில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுக்கள் பல மாற்றப்பட்ட போதும், கல்வி அமைச்சு மாற்றப்படவில்லை. இதன் திருப்திகரமான செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பிரதமர் உட்பட ஜனாதிபதியும் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்றார்