வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வரர் கோவிலானது, நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது.
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜக் பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். இந்தக் கோவிலின் தல விருட்சம் அரச மரம்.
இந்நிலையில், வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சமான அரச மரத்தில் நேற்றிரவு இரவு திடீரென தீப்பற்றியது. இதையறிந்த பக்தர்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கோவிலுக்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரத்தின சபைகளில் சிறப்பு வாய்ந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சத்தில் திடீரென தீப்பற்றியது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.