கூட்டமைப்பின் ஐவர் அடங்கிய குழு ஜெனிவா செல்ல முடிவு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கூட்டமைப்பின் ஐவர் அடங்கிய குழு ஜெனிவா செல்ல முடிவு

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்  இந்த அமர்வின் உப குழு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்றினையும் அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்  நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவரலின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூடடத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முற்பகல் 10.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரை நீண்டநேரம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைப பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ளமையினால் அந்த விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசாங்கமானது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே இந்த விடயத்தை சுட்டிக்காட்டவேண்டியதன் அவசியம் குறித்து இங்கு பலரும் வலியுறுத்தியுள்ளனர். பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குழுவொன்று அனுப்பப்படவேண்ஙடியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 
இதனையடுத்து 5 பேர் கொண்ட குழுவினை ஜெனிவா அமர்வில் பஙகேற்க அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஜெனிவாவுக்கு சென்று உபகுழுக் கூட்டங்கள் உட்பட நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. 
இந்தச் சந்திப்பின்போது ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டுமென்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு கொண்டுசெல்லவேண்டுமானால் அதற்கு ஒரு நாடு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எந்தநாடும் இந்த முயற்சிக்கு இணங்கப் போவதில்லை. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்டாலும் வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து அந்த விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிடும். எனவே இந்த முயற்சி சாத்தியப்படாது. எனவேதான் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அழுத்தங்களைக் கொடுத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
இந்தக் கூட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பில் செயலகத்தை அமைக்கும் விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் காணாமல் போனோர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணமுடியாது. சட்டரீதியாக காணாமல் போனவர் இறந்துவிட்டதாக சான்றிதழைப்பெறும் நிலைமையே இதன்மூலம் உருவாகும். இந்தப் பிரேரணை மூலம் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் காப்பாற்றப்படுவர் என்றும் இங்கு சிலர்  கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

About Unknown