போர்க்குற்றங்களை நிராகரிக்கும் எமது நிலைப்பாட்டை இம்முறையும் ஜெனிவாவில் தெரிவிப்போம் என எலிய அமைப்பின் பிரதிநிதியாக ஜெனிவா செல்லவுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் ஜெனிவா செல்லவுள்ளதாகவும் அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர எலிய அமைப்பின் பிரதிநிதியாக ஜெனிவா செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இம்முறையும் எலிய சார்பில் நான் ஜெனிவா பயணமாகின்றேன். எதிர்வரும் 16 ஆம் திகதி பயணமாக நினைத்துள்ளேன். இம்முறையும் நாங்கள் எமது நிலைப்பாட்டினை உறுதியாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே இலங்கையின் சர்வதேச தரப்பிடம் அடிபணிய வைத்துவிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், காணாமல்போனோர் காரியாலயம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்தும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாக வாக்குறுதி வழங்கியும் எமது இராணுவத்தை தண்டிக்கும் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவிட்டது.
ஆகவே இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரையில் சர்வதேசம் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலமாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எவ்வாறிருப்பினும் நாம் தொடர்ச்சியாக எமது இராணுவத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றோம். இம்முறையும் நாம் இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். ஜெனிவாவில் எமது கரங்களை பலப்படுத்தும் தரப்பை சந்தித்து அவர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். சர்வதேச சிங்கள அமைப்புகள், சிங்கள மக்களை சந்தித்தும் எமக்கு ஆதரவான நகர்வுகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுப்போம்.
எமது இராணுவத்தை தண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். அதற்கான குரலாகவே நாம் ஜெனிவாவில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றோம்.
இந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசத்துரோக செயற்பாட்டை நாம் சாதாரணமாக விடப்போவதில்லை. எமது ஆட்சியில் இவர்கள் அனைவரையும் கண்டிப்பாக தண்டிப்போம். இன்று இராணுவத்தை குறைகூறும் நபர்கள், சர்வதேச நாடுகளில் இருந்துகொண்டு புலிகளை ஆதரிக்கும் நபர்கள் இலங்கையை பழிதீர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கையில் இலங்கையின் தேசியக் கொடியை தரையில் வீசி கால்களால் மிதித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துமே இலங்கையில் ஒற்றுமையாக வாழும் தமிழ்–சிங்கள மக்கள் மத்தியிலேயே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.