விவாதம் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கலந்து கொள்ளாது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழங்கலில் மோசடி நடந்துள்ளமை தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆணைக்குழு நிறுவப்பட்டது. அதேபோன்று முன்னைய ஆட்சியின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கும் ஜனாதிபதியினால் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இவ்விரு ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே இவ்விரு அறிக்கைகளை பாராளுமன்றம் சமர்ப்பித்து விவாதம் நடத்தப்படவுள்ளன. எனினும் இரு அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அத்துடன் குறித்த அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் கலவரமான நிலைமையும் ஏற்பட்டது.
இதன்படி ஜனவரி முதல் வாரத்தில் கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது பெப்ரவரி 20,21 ஆம் திகதிகளில் இவ்விரு அறிக்கைகள் மீது விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவாதத்தை தேர்தலுக்கு முன்னர் நடத்தி காட்டுமாறு சவால் விடுத்தமைக்கு அமைவாக பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி விவாதத்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு ஆலோசனை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஆராய மீண்டும் கட்சி தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலைமை ஏற்பட்டது. அத்துடன் 8 ஆம் திகதி விவாதம் நடத்துவதில் சட்ட சிக்கலும் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. இதற்கு அமைவாக பெப்ரவரி 6 ஆம் திகதி விவாதத்தை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து இரு அறிக்கைகளின் மீது இன்றைய தினம் விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு அறிக்கைகள் மீதான விவாதம் ஒரு நாளுடன் மட்டு்ப்படுத்தப்படாது என்றும் தேர்தலின் பின்னர் விவாதம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் இன்றைய விவாதத்திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
என்றாலும் தேர்தல் பிரசார கூட்டங்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டடணியும் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.