மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் கோவில் வளாகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன. மேலும் வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. சில கல் உத்திரங்களும் இடிந்தது. இதையடுத்து பக்தர்கள் அவ்வழியே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தீ விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. 6 அடி நீளம், 5 அடி அகலத்திற்கு மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் நின்ற பெரிய கற்தூண் ஒன்றும் சாய்ந்துள்ளது. கோவில்களில் காற்றோட்ட வசதிக்காக உயரமான மேற்கூரைகள், வெப்ப நிலையை சமப்படுத்தும் வகையில் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளன. ஆனால் வணிக நோக்கங்களுக்காக கோவிலின் பழமையான கட்டமைப்பு மாற்றி குளிர்சாதன வசதி, மின் இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன. இவை தான் மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.
கோவில்களின் உள்ளே இருக்கும் கடைகளில் ஏற்பட்ட மின்கசிவால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே கலாசாரத்தின் அடையாளங்களாக திகழும் கோவில்களின் பழமையை பாதுகாக்க கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை நினைத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த மேற்கூரை வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முகப்பு / இந்தியச் செய்திகள்
/ மீனாட்சி அம்மன் கோவிலில் பரபரப்பு: வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது