அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒன்றிணைந்த எதிரணியினரிடம் நேற்று உறுதியளித்திருந்தார்.
இதுதொடர்பில், ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் என்ற அமைப்பின் சார்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், “பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு முன்னர் இருந்தது. ஆனால், 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், அந்த அதிகாரம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
“நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலமே பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.