தேர்தல் மற்றும் வாக்களிப்பு கடமைகளில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் 65 ஆயிரத்து 758 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பு காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும். நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள் மக்கள் வாக்களிப்பிற்காக நிறுவப்பட்டுள்ளன.340 உள்ளூராட்சி சபைகளில் 24 மாநகரசபைகளுக்கும், 41 நகரசபைகளுக்கும் 276 பிரதேச சபைகளுக்கும்மான தேர்தலாக இடம்பெறுகின்றது. இதில் 60 வீதம் வட்டார அடிப்படையிலும் 40 வீதம் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இன்று நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்லும் போது தமது அடையாள அட்டை மற்றும் தேர்தல் வாக்காளர் அட்டை என்பவற்றை மாத்திரம் கொண்டுசெல்ல முடியும். அனாவசியமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல் , புகைப்
படம் எடுத்தல், புகைத்தல் மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச் சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் செயலகத்தினால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டை ஆகிய அட்டைகளில் ஏதேனுமொன்றை சமர்ப்பிக்காவிடின் வாக்களிக்க முடியாது.
தெளிவில்லாத அடையாள அட்டைகள் (புகைப்படத்தின் மூலம் ஆள் அடையாளம் காண முடியாதாயின் அல்லது பெயர் வாசிக்க முடியாதவாறு அழிந்திருப்பின்) அமைச்சுக்களினால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கின்ற போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்குமாக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் உள்ளடங்கலாக 65ஆயிரத்து 758 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது. தலா 4 நடமாடும் பாதுகாப்பு சேவைகள் இடம்பெறுவதுடன், தேர்தல் முடிவுகளை வெளியிடும் 25 மத்திய நிலையங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்காக இலங்கை போக்குவரத்து சபை 1337 பஸ்களை தேர்தல் பணிகளுக்காக வழங்கியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பஸ்கள் மூலம் தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பு பிரிவு பணிகளுக்காக இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற வாக்குச்சீட்டில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேச்சைக் குழுவென்ற சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும். வேட்பாளரின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கமாட்டாது. எனவே வாக்கினை நீங்கள் அளிக்கின்ற போது, உங்களுக்கு விருப்பமான கட்சியின் பெயர், சின்னம் அல்லது குழுவின் பெயர் மற்றும் சின்னம் உள்ள நிரலில் சின்னத்துக்கு வலப்புறமாகவுள்ள கூட்டில் ஒரேயொரு புள்ளடியை (x) என புள்ளடி இடவேண்டும்.
வாக்குச் சீட்டில் வேறெந்த சின்னத்தை இடுவதையோ அல்லது வரைவதையோ அல்லது எழுதுவதையோ கட்டாயமாக தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் பல்வேறு அடையாளங்களை வரைதல், அடையாளமிடல், வாக்காளரை அடையாளம் காணச் செய்வதற்கான ஒரு முயற்சியாகக் கொள்ளப்பட முடியுமென்பதாகும். ஆகவே உங்களுக்கு விருப்பமான கட்சியின் அல்லது குழுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரலிலுள்ள அக்கட்சியின் அல்லது குழுவின் சின்னத்திற்கு வலப்புறமாக உள்ள வெற்றுக் கூட்டில் ஒரேயொரு புள்ளடியை (X) மாத்திரம் இட்டு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
மாவட்ட ரீதியாக வாக்காளர்கள்
மாவட்ட ரீதியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை கொழும்பு மாவட்டத்தில் 1,652,389 பேரும், கம்பஹ மாவட்டத்தில் - 1,724,309 பேரும், களுத்துறை மாவட்டத்தில் - 941,742 பேரும், கண்டி மாவட்டத்தில் - 1, 097,342 பேரும், மாத்தளை மாவட்டத்தில் - 395,786 பேரும்,
நுவரெலியா மாவட்டத்தில் -562, 025 பேரும், காலி மாவட்டத்தில் - 848,877 பேரும், மாத்தறை மாவட்டத்தில் - 644,800 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - 479,498 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 555,210 பேரும், வன்னி மாவட்டத்தில் - 273707 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் - 389,582 பேரும், திகாமடுல்ல மாவட்டத்தில் - 493,742 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் -272822 பேரும், குருநாகல் மாவட்டத்தில் - 1,315,715 பேரும், புத்தளம் மாவட்டத்தில் - 587,683 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் - 672,161 பேரும், பொலன்னறுவ மாவட்டத்தில் - 321, 594 பேரும், பதுளை மாவட்டத்தில் - 649, 472 பேரும், மொனராகலை மாவட்டத்தில் - 360, 368 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் - 852, 473 பேரும், கேகாலை மாவட்டத்தில் - 669, 570 பேரும் இம்முறை மாவட்ட அடிப்படையில் வாக்களிப்பிற்கு தெரிவாகியுள்ளனர். மேலும் தேர்தல் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள வாக்கா ளர்களின் எண்ணிக்கை 15, 760, 802 பேராக இருந்தாலும் குறைநிரப்பு இடாப்பில் காணப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கை 58 பேருடன் மொத்தமாக 15, 760, 860 பேர் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தெரிவாகியுள்ளனர்.