உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பிக்கப்படும். உறுப்பினர்கள் கட்சி மாறினால் உறுப்பினர் பதவி இரத்தாகும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் அங்கத்தவர்கள் பற்றிய சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் நியதியின் பிரகாரம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவிப்பினூடாக உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்படும்.
அத்துடன் ஏதாவது உள்ளூராட்சி மன்றம் ஒன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி ஒன்று அல்லது சுயேட்சை குழுவொன்று குறித்த சபையில் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையில் 50வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக்கொண்டிருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செயலாளரிடம் அல்லது சுயேட்சை குழுவின் தலைவரிடம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சபையின் தலைவர், உபதலைவர், நகர பிதா, பிரதி நகரபிதாக்களின் பெயர்களை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும்.
அதேநேரம் குறித்த உள்ளூராட்சி மன்றமொன்றில் மொத்த ஆசனங்களில் 50வீதமோ அதற்கு அதிகமோ அரசியல் கட்சியொன்றினாலோ அல்லது சுயேட்சை குழுவொன்றினாலோ பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், குறித்த சபையின் முதலாவது சபை அமர்வின்போது நகரபிதா அல்லது பிரதி நகரபிதா சபை உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவுசெய்துகொள்ளப்படவேண்டும். இதன்போது சபைக்கு உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் தலைமை வகிப்பார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தின் 10ஆம் சரத்தின் பிரகாரம் எந்தவொரு கட்சியின் செயலாளரினால், தங்களின் கட்சியினால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் உறுப்பினர் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிப்பதன் மூலம் அதனை மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், குறித்த உறுப்பினர் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சி செயலாளருக்கு தெரிவிக்க முடியும்.