இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 556 பேருக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் 33 பேருக்கு உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உன்னாவோ மாவட்டத்தில் அதிகளவில் எச்.ஐ.வி பாதிப்புகள் இருப்பதாக முறைப்பாடுகள் எழுந்த நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை சமீபத்தில் இரு நபர்கள் கொண்ட குழுவை பிரேம்கஞ்ச், சாகிம்ர்புர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய அனுப்பியது.
அவர்கள் 566 பேரை பரிசோதனை செய்ததில் தற்போது வரை 33 பேர் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் இத்தனை பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.
அங்குள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜேந்திர குமார் என்பவர் சிகிச்சைக்காக தம்மிடம் வருபவர்களுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
செலவைக் குறைக்கும் விதமாக அவர் இப்படி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பிடிபட்டுள்ள ராஜேந்திர குமார் முறையாக மருத்துவம் படித்தவர் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் உயர் சிகிச்சை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.