நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், சாலையோரங்களில், தோட்டங்களில் கிடைக்கும் மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு பாதுகாப்பான எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோரை கிழங்கின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை தருகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது.
கோரை கிழங்கை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரை கிழங்கு, சுக்குப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: கோரை கிழங்கு 5 கிராம் வரை எடுத்து லேசாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் தணியும். நீர்பாங்கான இடங்களில் கோரைக்கிழங்கு எளிதாக கிடைக்கும். இது தைலங்களில் மணத்துக்காக சேர்க்கப்படுகிறது. ரத்தவட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. உடல் வலியை போக்கும். காய வைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
கோரை கிழங்கை பயன்படுத்தி சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரை கிழங்கு, வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு. செய்முறை: கோரை கிழங்கை நசுக்கி எடுக்கவும். இதனுடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். அல்சர் சரியாகும்.கோரை கிழங்கு பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைக்கு கோரை கிழங்கு மருந்தாகிறது. வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.
கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும். முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும்.பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. பெரியவகை கோரையால் பாய் செய்யப்படுகிறது. இது பல்வேறு நோய்களை போக்குகிறது.தலைவலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். விளக்கெண்ணெயுடன் சுக்கு பொடி, சாம்பராணி சேர்த்து தைலமாக காய்ச்சி வடிக்கட்டி எடுக்கவும். தலைவலி வரும்போது இந்த தைலத்தை மேல்பற்றாக பூசினால் தலைவலி சிறிது நேரத்தில் விலகிப்போகும்.