வவுனியா – நெளுக்குளம், ஈசன்கோட்டம் பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான நிலையில் சூழலை வைத்திருந்த 14 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தினால் 33,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் சுமார் 525 வீடுகள் பார்வையிடப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன – என்று வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வைப் பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நெளுக்குளம், ஈசன்கோட்டம் பகுதிகளில் 19 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நெளுக்குளம் மற்றும் ஈசன்கோட்டம் பகுதிகள் தொடர்ந்தும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வீடுகள் பார்வையிடப்பட்டு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் தமது பகுதிகளைச் சுத்தப்படுத்தி டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.எமது சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடும் போது டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் இனங்கானப்பட்டால் சட்ட நவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.