சென்னை : ஈரான் நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் துபாயில் தொழில் செய்து வருகின்றனர். துபாயில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த 15 மீனவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஈரான் கடற்படை சிறைபிடித்துள்ளனர் .
இந்நிலையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.இவர்களுக்கு ஈரான் நீதிமன்றம் அபராதம் விதித்ததாகவும், அந்த அபராதத் தொகை, அவர்களை பணிக்கு அமர்த்தியவர்களால் செலுத்தப்பட வேண்டும் எனவும், முதலமைச்சர் கடிதத்தில் கூறியுள்ளார். சிறையில் உள்ள மீனவர்கள் இருவர் ரத்த அழுத்தத்தாலும், மற்றொருவர் இதய நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை மீனவர்கள் நீண்ட காலம் சிறையில் கழித்தால் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே பிரதமர் மோடியை நேரடியாக தலையிட்டு மீனவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளித்து , அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர்களுக்கு உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டு கொண்டுள்ளார் .
முகப்பு / இந்தியச் செய்திகள்
/ ஈரான் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்