வடகொரிய அதிபருக்கு டிரம்ப் பதிலடி அமெரிக்காவின் அணுகுண்டு ஸ்விட்ச் மிக வலிமையானது - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வடகொரிய அதிபருக்கு டிரம்ப் பதிலடி அமெரிக்காவின் அணுகுண்டு ஸ்விட்ச் மிக வலிமையானது




வாஷிங்டன் : ‘‘வடகொரியாவை விட அமெரிக்காவிடம் உள்ள அணுகுண்டு பொத்தான் மிகவும் பெரியது; மிகவும் வலிமையானது’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘வடகொரியாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை பெற்றவை. அதற்கான பொத்தான் (ஸ்விட்ச்) எனது மேஜையில் உள்ளது’ என தெரிவித்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிடடுள்ள பதிவில், ‘வடகொரியாவை விட அமெரிக்காவின் அணுகுண்டு பொத்தான் மிகவும் பெரியது மட்டுமின்றி; மிகவும் வலிமையானதும் கூட. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அணுகுண்டுக்கான பொத்தான் அவரது மேஜையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது நாட்டில் குறைபாடுகளுடன், பட்டினி கிடப்பவர்கள் யாராவது அவரிடம் சொல்லுங்கள். எங்களிடமும் அணுகுண்டு பொத்தான் உள்ளது. ஆனால், அது அவரது பொத்தானை விட மிகவும் பெரியது; மிகவும் வலிமையானது. எங்களுடைய பொத்தான் செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது உலகளவில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல், வடகொரியா மீது அதிகமான அழுத்தத்தை தர வேண்டும். இதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்கா அதன் தேர்வுகளை தன்னுடைய மேஜையில்தான் வைத்துள்ளது. 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக வடகொரியாவை, தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றாது. தென்கொரியா உடனான உறவு முன்பைவிட அதிக வலிமையான நிலையில் நீடிக்கும். 

வடகொரியாவிற்கு எதிரான அழுத்தத்தை அளிக்க அமெரிக்கா, தென்கொரியவுடன் இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.வடகொரியா கடந்த ஆண்டில் தனது ஏவுகணை திட்டத்தை விரிவுப்படுத்தியது. கடந்த பிப்ரவரியில் இருந்து 23 ஏவுகணைகளை அந்நாடு ஏவியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் வடகொரியாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தது. சில மாதங்களாக குறைந்திருந்த, இந்த வார்த்தைப்போர் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

About Unknown