டோக்கியோ : வடகொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகள், ஜப்பானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாடு ஏவிய மூன்று ஏவுகணைகள் ஜப்பானை கடந்து சென்று கடலில் விழுந்தன. இதனால், ஜப்பான் மக்களிடையே பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தும் போதெல்லாம், ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு தொலைபேசி உள்ளிட்டவை மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் டோக்கியோவில் ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்வது குறித்து மக்களுக்கு ஜப்பான் ராணுவம் நேற்று பயிற்சி அளித்தது.
பயிற்சியின்போது, ‘ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லோரும் பாதுகாப்பான இடங்களிலும், சுரங்க பாதைகளிலும் பதுங்கிக் கொள்ளுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டது. பூங்காவின் ஊழியர் ஒருவர் ஓடிக்கொண்டே, “ஏவுகணை ஏவப்பட்டுள்ளது, ஏவுகணை ஏவப்பட்டுள்ளது” என்று கூச்சலிட்டப்படி சென்றதும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொண்டனர்.