கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளிநொச்சியில் 12 வயது நிரம்பிய சிறுமியை கடத்திச் சென்று தேவாலயத்திற்கு பின்னாலுள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். அத்துடன் தான் மதுபோதையில் இருந்த போதே இச்சம்பவம் நடந்ததாகவும் சாட்சியமளித்திருந்தார்.
எதிரி தரப்பு சட்டத்தரணி குறித்த நபர் திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு குறைந்த தண்டனை வழங்க வேண்டும் என கருணை விண்ணப்பம் செய்தார்.
இதன்போது அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் குறித்த குற்றச் செயலானது பாரதூரமான குற்றச்செயல் எனவும் அதற்கு ஆகக்கூடியது 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்க சட்டம் பரிந்துரைப்பதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து குறித்த சிறுமியை கடத்தி சென்றமைக்காக 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், பாலியல் வன்புணர்வு புரிந்தமைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்ததுடன் இரண்டு தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி அனுமதியளித்தார்.
மேலும் இக்குற்றங்களுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை கட்டத்தவறின் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா நஷ்டஈடும் கட்டத்தவறின் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.