மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானிக்கு ...... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானிக்கு ......


Related imageகடந்த வாரம் மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
                      
அகலவத்தையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வது தொடர்பிலும் மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுவது தொடர்பிலும் கடந்தவாரம் வர்த்தமானியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதுபான சாலைகளை முற்பகல் 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கியும், பெண்களுக்கு மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பாகவும் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு நிதி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 
இதன்படி நாளை முதல் அந்த சுற்று நிருபம் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 
ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நீதியான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த மூன்று வருடங்களில் இதற்காக பல அர்ப்பணிப்புக்களைச் செய்ததாகவும் தெரிவித்தார். 
இன்று நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்துடன் கூடிய ஆட்சியொன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,  இந்த சுதந்திரத்தை மனிதாபிமானத்திற்குட்பட்ட வகையில் அனுபவிக்க வேண்டும் என்றும் சிலர் அந்த சுதந்திரத்தை இல்லாமற் செய்வதற்கு வழியமைப்பதாகவும் குறிப்பிட்டார். 
நீதியான சமூகம் குறித்து பேசுவதைப்போன்று நீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வாகன விபத்து ஒன்று தொடர்பில் தனது சகோதரர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம் பொலிஸாருடன் அது தொடர்பாக எதுவுமே பேசவில்லை எனக் குறிப்பிட்டதுடன், நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர் ஒருவரின் சகோதரர் ஒருவர் வாகன விபத்து தொடர்பில் சிறைசெல்ல வேண்டி ஏற்பட்டது என்று இருந்தால் அது தமது சகோதரர் மட்டுமே என குறிப்பிட்டார்.
மக்கள் எதிர்பார்க்கின்ற நீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தான் அனைவருக்கும் ஒரே கொள்கையையே பின்பற்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டுவதில் கட்சி, நிறம் என்ற எந்தவொன்றும் தமக்கு முக்கியமானவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களி்ன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றலுடன் அகலவத்தையில் இன்று இடம்பெற்றது. 
மகா சங்கத்தினர், சமயத் தலைவர்கள் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


About Unknown