ஆறு வருடங்கள் (2021 வரை ) தன்னால்ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரியுள்ள நிலையில் அதனை ஆராய்வதற்காக ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு பெயரிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் திறந்த நீதிமன்றில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்து தீர்மானிக்க, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் இந்த குழுவை நியமித்துள்ளார்.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இக்குழுவுக்கு தலைமை வகிப்பதுடன் உயர் நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்கள் நால்வர் அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன்படி உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசருக்கு அடுத்த படியாக சிரேஷ்டத்துவத்தில் முன்னிலையில் உள்ள நீதியரசர் ஈவா வணசுந்தர, நீதியரசர் புவனேக அனுவிஹார, நீதியரசர் கே.ரி.சித்ரசிறி, நீதியரசர் சிசிர டி ஆப்றூ ஆகியோரே குறித்த ஐவர் கொண்ட குழாமின் ஏனைய அங்கத்தவர்களாவர்.
இந்த விடயம் இன்று முற்பகல் 11 மணிக்கு உயர் நீதிமன்றில் ஆராயப்படும் நிலையில், சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் விவகாரம் தொடர்பிலான உயர் சட்டவாதிகள், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அதில் அங்கம் வகிக்கும் விரும்பிய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்யவுள்ளனர். மன்றில் பதிவு செய்யப்படும் கருத்துக்களை ஆராய்ந்து பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட குழாம், ஜனாதிபதி மைத்திரியின் பதவிக் காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என தீர்மானிக்கவுள்ளது.
இன்று விருப்பமான சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டுமா அல்லது 6 வருடங்களாக அமைய வேண்டுமா என்பது குறித்து சார்பான மற்றும் எதிரான வாதங்களை முன் வைக்க முடியும் என தமது சங்க உறுப்பினர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பின் 32 (1) ஆம் சரத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய திகதியில் குறித்த சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 6 வருடங்கள் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, 2015 மே 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியல் திருத்தத்தின் பிரகாரம், அரசியலமைப்பின் 30 ஆம் சரத்து திருத்தப்பட்டதாகவும், அதன்படி இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 19 ஆம் திருத்தத்தின் 3 (2) ஆம் பிரிவூடாக திருத்தி 5 வருடங்கள் என மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையிலேயே 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவிக்கு வந்த தன்னால், அரசியலமைப்பின் பழைய ஏற்பாடுகள் பிரகாரம் 6 வருடங்கள் பதவியில் நீடிக்க முடியுமா ? அல்லது தானும் 5 வருடங்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டுமா என உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தை அவர் கோரியுள்ளார். இன்று இந்த விவகாரம் விசார ணைக்கு வருகின்றது.