ஸ்ரீலங்காவில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட இதயமாற்று சத்திர சிகிச்சையின் வெற்றிகர சாதனையை பற்றி அண்மையில் அனைவராலும் பேசப்பட்டு வந்தாலும் தனது இதயத்தை தியாகம் செய்து, ஸ்ரீலங்காவின் முதலாவது இதயமாற்று சத்திர சிகிச்சைக்கு பங்களிப்பு செய்து ஸ்ரீலங்கா மருத்துவ வரலாற்றில் இடம்பிடித்தது கூட தெரியாமல் மரணித்துபோன 21 வயதான பிரதீப் சம்பத் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை.
திடீர் விபத்தின் காரணமாக பிரதீப் மூளைச் சாவடைந்ததன் பின்னரும் உடற்பாகங்களை மற்றையவர்களுக்கு தானம் செய்வதன் ஊடாக தமது மகனை உயிர்வாழ வைக்க முடியும் என அறிந்து கொண்ட பிரதீப்பின் பெற்றோர் உடலுறுப்புகளை தியாகம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
அத்துடன் கண்டி மாவில்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞரின் இதயத்தை மாத்திரமல்லாது அவரது சிறுநீரகங்கள் மற்றும் இரு கண்கள் போன்றவற்றையும் வழங்குவதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
பிரதீப்பின் பெற்றோர் தங்களால் முடிந்தவரை இதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். மகனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியமைக்காக கண்டி பொது வைத்தியசாலையினால் பிரதீப்பின் பெற்றோருக்கு 6 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்பட்ட போதிலும், தமது மகனுக்காக செய்த புண்ணியகாரியமாக இந்த உடலுறுப்பு தானத்தை கருதி, அவர்கள் அப்பணத்தொகையை பெற்றுக்கொள்வதற்கு மறுத்திருந்தனர்.
உயிரிழந்த பிரதீப்பின் தந்தை ஒரு தொழிலாளி. தாய் தொழில் எதுவும் செய்யாமல் வீட்டிலிருந்து வருகிறார். பிரதீப்பின் மூத்த சகோதரி சில காலத்துக்கு முன்பு திருமணம் செய்து வேறிடம் சென்றுள்ள நிலையில் அவரது இளைய சகோதரி பாடசாலை கல்வியை நிறைவு செய்துகொண்டு வீட்டில் உள்ளார்.
பொருளாதார சிக்கல் கொண்ட இக்குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளையான பிரதீப், சாதாரண தரம் வரை கற்றிருந்த நிலையில் தனது கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.
அதன்பின்னர் தொழிலொன்றை எதிர்பார்த்திருந்த நிலையில் பிலிமத்தலாவை பிரதேசத்திலுள்ள கராஜ் ஒன்றில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடன் அவரது சகோதரியின் கணவரும் தொழில் பயில்வதற்கு அவ்விடத்துக்கு சென்றிருந்தார்.
அவ்வாறே அண்மையில், இவ்விருவரும் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்த வேன் ஒன்றினால் மோதுண்டு இருவரும் விபத்துக்குள்ளாகினர். இவ்விபத்தில் இருவரும் படுகாயமடைந்திருந்த போதிலும் பிரதீப்பின் நிலை கவலைக்கிடமாகியது.
விபத்தையடுத்து பிரதீப் பம்பரதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு வைத்தியர்கள் தம்மால் முடிந்தவரை முயற்சி செய்த போதிலும் பிரதீப் மூளைச் சாவடைவதை அவர்களால் தடுத்திருக்க முடியவில்லை.
இதனையடுத்து பிரதீப்பின் உடலுறுப்புகளை தானம் செய்வது தொடர்பாக அவரது பெற்றோரிடம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடியதனையடுத்து அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர், பிரதீப்பின் இதயம் சத்திரசிகிச்சையின் மூலம் பெறப்பட்டு அதனை அநுராதபுரத்தை சேர்ந்த 34 வயதான பெண்ணொருவருக்கு பொருத்தி இலங்கையின் முதலாவது இதயமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அவரது சிறுநீரகங்களும் வேறு இருவருக்கு பொருத்தப்பட்டன.
தமது மகன் தம்மை விட்டுப் பிரிந்து சென்றமை ஒருபுறம் வருத்தமளித்தாலும், அவரது உடலுறுப்புகள் மூலம் 5 பேர் பெரும் பயனடைவதையிட்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாக பிரதீப்பின் பெற்றோர் பெருமிதம் கொண்டனர்.