காதலி ஏமாற்றியதில் மனமுடைந்த நிதிநிறுவன ஊழியர் ஒருவர் தொடரூந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குழித்துறை அருகே ஞாறான்விளை தொடரூந்து தண்டவாளம் அருகே குறித்த வாலிபரின் உடலம் தொடரூந்து அடிபட்டு உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிணமாக கிடந்த வாலிபர் அருகே அவரது ஆதார் அட்டை மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் விசாரணையின் போது அவர் பெயர் பினு (வயது 25) என தெரியவந்துள்ளது.
அவர் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பாலிடெக்னிக் முடித்த இவர் தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள நிதிநிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பினுவும் , அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
சமீப காலமாக அந்த பெண் , பினுவை புறக்கணித்து வந்துள்ளார்.
அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
புறக்கணிப்பு தொடர்பில் அந்த பெண்ணிடம் பினு கேட்டுள்ளதை தொடர்ந்து , அதற்கு உன்னை பிடிக்கவில்லை , இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என அந்த பெண் கூறியுள்ளார்.
காதலிக்கு தன்னை பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன ? என்பது பற்றி பினு விசாரித்த போது , அந்த பெண் வேறொரு நபரை காதலிப்பது தெரியவந்துள்ளது.
தன்னை ஏமாற்றி வேறொருவரை காதலிப்பதை அறிந்த பினு மனமுடைந்து தொடரூந்து முன் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக காவற்துறை தெரிவித்துள்ளது.