டெல்லியில் 16 வயதான தேசிய அளவிலான கபடி வீராங்கனை தடகள வீரர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த கபடி வீராங்கனை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, ''வடக்கு டெல்லியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு கபடி வீராங்கனை. அவர் 35 - 40 வயது மதிக்கத்தக்க நிர்வாகி மற்றும் பயிற்சியாளர் ஒருவரால் சத்ராசல் மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து எங்கே சென்றார் என்பதோ, என்ன நடந்தது என்பதோ சிறுமிக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
அழைத்து சென்றவர் வீராங்கனைக்கு எதையோ சாப்பிட கொடுத்து இருக்கிறார். அதை சாப்பிட்டதும் வீராங்கனை மயக்கம் அடைந்துள்ளார்.
மறு நாள் அவரை மிரட்டிய பயிற்சியாளர், அவரை பஸ்நிறுத்ததில் இறக்கி விட்டுள்ளார். ஆரம்பத்தில் இதனை மற்றவர்களிடம் சொல்ல பயந்த வீராங்கனை பின்னர் ஜூலை 17ந்தேதி போலீசில் புகார் செய்து உள்ளார்.
புகாரைப் பெற்ற காவல்துறையினர், சிறுமியை லோக் நாயக் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் பாபு ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுமியின் புகாரை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிரிவு 377 மற்றும் பாஸ்கோ (சிறார் வன்கொடுமை எதிர்ப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இவ்வாறான பாலியல் தொந்தரவுகளும் கற்பழிப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், குற்றம் புரிவோருக்கான தண்டனை அதிகப்படுத்தினால் இவ்வாறான தவறுகள் குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாதிக்கப்படும் நபர்கள், வெளியில் சொல்ல பயந்தோ அவமானப்பட்டுக்கொண்டோ மறைத்து வைத்துக்கொள்ளாமல் வெளியில் கொண்டு வந்தால் தான் மேலும் பலரை அவர்கள் துன்புறுத்தாமல் தவிர்க்கலாம் என்றவாறும் ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.