கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால், வேலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இணையதளங்களில் வேலை தேடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியுடன் காலாவதியானது. புதிய ஒப்பந்தம் குறித்து இருதரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வேலை இழந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் புதிய வேலைகளை இணையதளம் மூலம் தேடி வருகின்றனர். சீக் (Seek) எனும் இணையதளம் மூலம் புதிய வேலை தேடி வருவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, வேலை இல்லாத நேரத்தில் கிரிக்கெட்டை மறக்காமல் இருக்க கோல்ப் மைதானத்தில் ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடித்து பயிற்சி செய்வதாக க்ளென் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், டேவிட் வார்னரோ, தனது மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தினைப் பதிவிட்டு, நான் வேலையை இழந்திருக்கலாம்.
இந்த பெண்ணின் ஆதரவை என்றும் இழந்ததில்லை என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சிட்னியில் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.