மக்கள் நிறைந்திருந்த ரயில் ஒன்றில் நின்று கொண்டே குழந்தைக்கு பாலூட்ட நிர்பந்தத்திற்கு உள்ளான பெண்ணொருவர், அப்போது "பயந்துபோய், அசௌகரியமாக" உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள லெய்ஜ்-அன்-சியை சேர்ந்த 32 வயதான பர்யோனி எஸ்தர் என்பவர் சி2சி ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அவருடைய 15 மாத கைக்குழந்தையான சஃப்ரான் தூக்கத்தை விட்டுடெழுந்தபோது, எஸ்தர் அவருக்கு பாலூட்ட வேண்டியதாயிற்று.
சி2சி என்பது ரயில் பயணச்சேவை வழங்கும் ஆங்கில நிறுவனமாகும்.
கைக்குழந்தையுடன் வருகின்ற தாய்மார்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கை பகுதிக்கு அருகில் நகர்ந்து சென்ற பின்னரும், யாரும் அவர் உட்கார இருக்கை வழங்கவில்லை. மாறாக மரியாதையின்றி சிரிக்க தொடங்கினர் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சி2சி ரயில் பயணத்தின்போது என்ன நடந்தது என்று எஸ்தர் அவருடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டது அதிகமாக பகிரப்பட்டதாக 'டெய்லி மெயில்' செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
சி2சி ரயில் நிறுவனம் பிறர் மீது கரிசனையோடு நடந்துகொள்ள வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது.
அவருடைய இரண்டு குழந்தைகளோடு எஸ்தர் ரயிலில் ஏறிய உடனே இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நான் என்னுடைய 5 வயது குழந்தையை வாயிலின் பக்கத்தில் காலியாக கிடந்த இருக்கையில் அமரச் செய்தேன். இந்த இருக்கையில் ஏற்கெனவே ஒருவர் இருக்கிறார் என்று உடனடியாக ஒரு நபர் கூறினார்.
"எனவே நாங்கள் நகர்ந்து சென்று, அந்த பயணம் முழுவதும் கழிவறைக்கு அருகில் நின்றுகொண்டே பயணித்தோம்" என்று எஸ்தர் கூறியுள்ளார்.
"இது மிகவும் விரும்பத்தகாத காரியமாக இருந்தது. என்னுடைய கைக்குழந்தை தூக்கத்தில் இருந்து எழுந்து அழுதது. அதனை தலாட்டி தூங்க வைக்க வேண்டியிருந்தது" என்றார் எஸ்தர்.
"ஏதாவது ஒரு இருக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கைக்குழந்தையுடன் வருகின்ற தாய்மார்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையை நோக்கி நகர்ந்தேன். இந்த இருக்கைகளில் இருந்தவர்களை உற்றுநோக்கி, பார்வையால் எனது நோக்கத்தை தெரியப்படுத்த முயன்றேன். அவர்கள் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை" என்று எஸ்தர் கவலையுடன் தெரிவித்தார்.
"கைக்குழந்தை தாய்மாரக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த இருக்கைகளில் இருந்தவர்களில் ஒருவர் மிதிவண்டி பந்தய வீரர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்து தற்போது உடல்நலம் தேறிவருகின்ற தன்னுடைய 2 வயது மகனை பார்ப்பதற்கு 'கிரேட் ஓர்மண்ட் தெரு' மருத்துவமனைக்கு பயணம் செய்து கொண்டிருந்த எஸ்தர், அந்த குழுவினரை எதிர்த்து கேட்க தேன்றவில்லை என்று கூறியுள்ளார்.
"பலரும் பிறர் பார்த்தவடன் தெரியாத வகையில் குறைபாடுகளை கொண்டிருப்பது எனக்கு தெரியும். அதனால், என்னை உட்கார அனுமதிக்க முடியுமா என்று அவர்களை கேட்க வேண்டுமென தோன்றவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.